மதுரை, ஜூலை 31 –
மதுரை அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் உண்டியல் காணிக்கைகளை ஒவ்வொரு மாதமும் கோயில் துணை ஆணையர் / செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் முன்னிலையில் திறக்கப்பட்டு வருவாய் சரிபார்ப்பு செய்வது வழக்கம்.
அந்த கடந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணியை திருக்கோவிலின் துணை ஆணையர்/ செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், மதுரை கூடலழகர் பெருமாள் திருக்கோயில் உதவி ஆணையர் பிரதீபா, ஆய்வர் கார்த்திகா திருக்கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி ஆகியோர் தலைமையில் திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், அருணா தேவி, பிஆர்ஓ முருகன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் முன்னிலையில் கோயில் உண்டியல் திறப்பு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோயில் பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உட்பட உழவாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியை தொடங்கினர். அந்த வகையில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 53,54,409/- ரொக்கமும் மற்றும் தங்கம் 32 கிராம், வெள்ளி 250 கிராம் ஆகியன கிடைக்கப் பெற்றதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.