மார்த்தாண்டம், ஜூலை 15 –
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நூறாவது ஆண்டாக நகராட்சி சார்பில் வாவுபலி பொருள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மூதாதையர்களுக்கு திதி தற்பணம் கொடுக்கும் நிகழ்வையொட்டி நடத்தப்படும் இந்த கண்காட்சியில் விவசாய கண்காட்சி, மாணவர்கள் மற்றும் படைப்பாளிகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை பொருட்கள் இடம் பெறும் அரங்குகளுடன் பல ராட்சத ராட்னங்களோடு பல பக்க காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 20 நாட்கள் நடக்க உள்ள இந்த ஆண்டிற்கான கண்காட்சி கடந்த 9ம் தேதி பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் துவங்கி வைத்து நடைபெற்று வருகிறது.
அரசு விழாவான இந்த நிகழ்ச்சியில் தமிழக கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிடுகிறார்கள். புற காவல்நிலையம் அமைத்து தினமும் சுழற்சி அடிப்படையில் 25 போலீசார், போக்குவரத்து போலீஸார் மற்றும் ஊர் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கடந்த காலங்களில் பணியாற்றி வந்தனர். இந்த ஆண்டு மூன்று நாட்களாக ஒரு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மக்கள் கண்காட்சி திடலை பார்வையிட்டு உள்ளனர். பாதுகாப்பு பணியில் போலீசார் இல்லாத காரணத்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டது. பொதுமக்களின் நான்கு செல்போனும், ஒரு குழந்தையின் தங்க செயினும் திருடு சென்று உள்ளது. வரும் நாட்களில் மேலும் கூட்டம் அதிகம் வர வாய்ப்பு உள்ளதால் பக்க காட்சி பார்க்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
பெண்கள் பாலியல் தொல்லை அதிகரிப்பதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் குழித்துறை நகராட்சி நகர் மன்ற தலைவர் பொன் ஆசை தம்பி திமுக தலைமையில் 21 வார்டுகளை சேர்ந்த அனைத்து கட்சி கவுன்சிலர் இணைத்து போராட்டம் நடத்த போவதாகவும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட பத்து லட்சம் ரூபாய் பணம் செலுத்த கூறி உள்ளனர். அதற்கான அரசாணை காவல் துறை வழங்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்? மேலும் காவல் துறை நடவடிக்கை அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று பேட்டியின் போது நகர் மன்ற தலைவர் பொன் ஆசை தம்பி தெரிவித்தார்.