தருமபுரி, ஜூலை 11 –
தருமபுரி மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய வழித்தடங்கள் நீட்டிப்பு மற்றும் வழித்தட மாற்றம், புதிய மகளிர் விடியல் பேருந்து சேவை தொடக்க விழா தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், ஜி.கே. மணி ஆகியோர் கொடியசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தனர். தருமபுரி மண்டல சார்பில் தருமபுரி மாவட்டத்தில் 6 புதிய வழித்தடங்கள் மற்றும் 101 வழித்தட நீட்டிப்பு, வழித்தட மாற்றம் என மொத்தம் 17 வழித்தடங்களில் 127 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் 286 கிராம, நகரங்களில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுகின்றனர்.
மேலும் பழைய புறநகர் பேருந்துகளுக்கு பதிலாக 31 புதிய பேருந்துகள் 45 புனரமைப்பு பேருந்துகள் என மொத்தம் 76 பேருந்துகளும், மகளிர் விடியல் பழைய பேருந்துகளுக்கு பதிலாக 20 புதிய பேருந்துகள் 15 புனரமைப்பு பேருந்துகள் என மொத்தம் 35 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள பேருந்து சேவையின் மூலம் 10 கிராமங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுகிறார்கள் இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்த விழாவில் உதவி ஆட்சியர் காயத்ரி, அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் செல்வம், நகராட்சி தலைவர் லட்சுமி, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அன்பழகன், நகராட்சி ஆணையாளர் சேகர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.