பூதப்பாண்டி, ஜுலை 10 –
குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள்அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 500 வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றது. விவசாயிகள் பொதுமக்கள் அச்சம். யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட கோரிக்கை.
குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள திடல், வெள்ளாம்ப்பி, கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் புகுந்து தென்னை, வாழை போன்ற பயிர்களை சேதப்படுத்துவதோடு மனிதர்களை தாக்கி சென்று வருகிறது. இந்நிலையில் திடல் அருகே கடம்படிவிளாகம் பகுதி மற்றும் ஒத்தமடை பகுதி கிராமத்திற்குள் இன்று இரண்டு காட்டு யானைகள் புகுந்தது.
மேலும் அப்பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த சுமார் 500 வாழை மரங்களை சேதப்படுத்தி விட்டு அப்பகுதி அருகே உள்ள கால்வாய்க்குள் இறங்கி மறு கரையில் ஏறி தப்பி சென்றது. இதனால் மீண்டும் கிராங்களுக்குள் யானைகள் வரும் சூழ்நிலை இருப்பதால் கிராம மக்கள் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், யானைகள் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட கிராம மக்களும் விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள். இதனை அடுத்து கிராமத்திற்குள் வந்து தப்பி சென்ற யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.