நாகர்கோவில், ஜூலை 4 –
நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் காவல்துறை விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்ட திருப்புவனம் அஜித் குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும், தொடரும் காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில், கோவில் காவலாளியான அஜித் குமார் போலீசாரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போலீசாரின் கொடூர தாக்குதல்களால் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 24 லாக்கப் மரணங்கள் அரங்கேறி உள்ளதால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஒரு அரசின் கீழ் வாழக்கூடிய மக்கள் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை மற்றும் பாதுகாப்பு குறைபாடு என்றால் அவர்கள் காவல் நிலையத்திற்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் பொது மக்களுக்கு காவல்துறையால் பாதுகாப்பு இல்லை.
மன உளைச்சலில் உள்ள காவலர்கள் பணியில் இருப்பதால் கொடூர தாக்குதல் நடைபெறுவதாகவும் இதனை தடுக்க வேண்டிய அரசு இதில் கவனம் செலுத்தாமல் வேடிக்கை பார்ப்பதால் காவல் நிலையம் செல்ல பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுவதால் இந்த அரசு மக்களுக்கான அரசு இல்லை என தெரிவித்து காவல்துறை நண்பனா? இல்லை எமனா? இன்னும் எத்தனை உயிர் வேண்டும் முதல்வரே? ரத்தம் குடிக்கும் காவல்துறை, கொலைக்கூடங்களாக மாறும் காவல் நிலையங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலமன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன், நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர் முத்து குமார், மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெயன்றீன், குமரி மண்டல செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கன்னியாகுமரி மண்டல மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகிக்க மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் மரிய ஜெனிபர் மற்றும் ஆன்சி ஷோபா ராணி, மாநில கொள்கை பரப்பு செயலாளர் சீலன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ஹீம்லர், கலை இலக்கிய பாசறை பேராசிரியர் கலையரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.