தஞ்சாவூர், ஜூலை 3 –
பெற்றோரை இழந்து நிர்க்கதியாக நின்ற பெண்ணை தனது மகளைப் போன்று பாவித்து தந்தையாக இருந்து தனது சொந்த செலவில் திருமணத்தை செய்து வைத்துள்ள ஐஏஎஸ் அதிகாரி. திருமண விழாவை முன்னின்று நடத்தி வைத்த அவர் மணமகனிடம் எனது மகளை நன்றாக பார்த்துக்கொள் என்று கண்ணீர் மல்க அறிவுரை கூறிய சம்பவம் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்துள்ள ரெட்டவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையா. இவரது மனைவி செல்வி. இந்த தம்பதிக்கு பாண்டி மீனா, பாண்டீஸ்வரி ஆகிய இரண்டு மகள்கள். இவர்களில் பாண்டி மீனா நர்சிங் படித்துள்ளார். பாண்டீஸ்வரி மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணையா நுரையீரல் பாதிப்பாலும், செல்வி சிறுநீரக பாதிப்பாலும் அடுத்தடுத்து இறந்து விட்டனர். பெற்றோரை இழந்ததால் நிலை குலைந்து போன பாண்டி மீனா மாற்றுத்திறனாளியான சகோதரி வைத்துக் கொண்டு நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 2022 ஆண்டு அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வாட்ஸ்-ஆப் மூலம் தனது ஏழ்மை நிலை எடுத்துக் கூறி தனக்கு படிப்பு செலவுக்கு நிதி உதவி செய்யுமாறு வேண்டினார் பாண்டி மீனா. உடனே கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அந்த பெண்ணிடம் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரது கண்ணீர் கதையை கனிவுடன் கேட்ட அவர் அந்த பெண்ணுக்கு உடனடியாக உதவி செய்ய முன் வந்தார். படிப்பிற்கான தொகையை வழங்கினார்.
பின்னர் சகோதரிகள் இருவரும் குடிசை வீட்டில் வசிப்பதை உணர்ந்து அவர்களுக்கு பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் தன் விருப்ப நிதியிலிருந்தும், தன்னார்வலர்கள் மற்றும் பேராவூரணி அரிமா சங்கத்தினர் உதவியுடனும் புதிதாக வீடு கட்டி கொடுத்தார். அதோடு விட்டுவிடாமல் சகோதரிகள் இருவரையும் தனது மகள்களை போன்று பாவித்து அவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் பணி மாறுதல் பெற்று சென்னை பத்திர பதிவுத்துறை ஐஜி ஆக சென்றார். எத்தனையோ பேர் மாவட்ட கலெக்டராக வருவார்கள். அந்த மாவட்டத்தில் பணிபுரிந்து பணி மாறுதல் இட பெயர்ந்து சென்று விட்டால் தான் புதிதாக சேர்ந்த பொறுப்பில் மூழ்கி விடுவார்கள். ஆனால் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரோ சென்னை சென்ற பின்பும் தான் மகள்களாக பாவித்து வரும் சகோதரிகளை மறந்து விடவில்லை.
இந்த நிலையில் பாண்டி மீனாவுக்கு தேவையான உதவிகளை அந்த பகுதியைச் சேர்ந்த அபிமன்யு என்பவர் செய்து வந்தார். தங்களுக்கு உதவி செய்து வந்த அபிமன்யு தனது வாழ்க்கை துணைவராக வந்தால் நன்றாக இருக்கும் என்று பாண்டி மீனா விரும்பினார். அவரது விருப்பத்தை அபிமன்யு ஏற்றுக் கொண்டார். இத்தகவலை தனது தந்தையான தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் தெரிவித்த பாண்டி மீனா அவரது சம்மதத்திற்காக காத்திருந்தார். வழக்கமாக தந்தையைப் போன்று தனது மகளின் எதிர்கால நலன் கருதி தீர விசாரித்த அவர் உடனடியாக சம்மதம் தெரிவிக்காமல் அதற்கான காலக்கெடு விதித்தார். அதன்படி இருவரும் சிறிது காலம் காத்திருந்தனர். அவர்களது காதலின் உறுதி தன்மையை உணர்ந்த அவர் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். அதன்படி பாண்டி மீனா – அபிமன்யு திருமணம் பேராவூரணியில் நடந்தது. இந்த திருமணத்தை அவர் தனது சொந்த செலவில் நடத்தி வைத்தார்.
தனக்கான பல்வேறு பணிகளுக்கு இடையிலும் இந்த திருமண விழாவில் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது மணமகன் அபிமன்யுவிடம் பாண்டி மீனாவை எனது சொந்த மகளை போன்று உன்னிடம் ஒப்படைத்து உள்ளேன். அவளை நல்லபடியாக பார்த்துக் கொள் என்று கூறினார். இவ்வாறு அவர் கூறிய போது உணர்ச்சிப் பெருக்கால் அவரது கண்கள் கலங்கின. இந்த காட்சி திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது.
மணமகளான பாண்டி மீனா கூறும் போது: எனது பெற்றோர் இறந்த பின் என்னையும் எனது தங்கையையும் தனது குழந்தைகளைப் போன்று எங்களை அப்பா (தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்) பார்த்துக் கொண்டார். திக்கற்றோருக்கு தெய்வமே துணை; ஆதரவற்றோருக்கு ஆண்டவனே துணை என்பது போன்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக இருந்தபோதும் சரி, சென்னைக்கு பத்திரப்பதிவுத் துறை ஐ.ஜி யாக சென்ற பின்னரும் சரி அடிக்கடி எங்களை தொடர்பு கொண்டு நலம் விசாரித்து எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து எங்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.
குடிசை வீட்டில் வசித்து வந்த எங்களுக்கு வீடு கட்டி கொடுத்தார். அத்துடன் விட்டு விடாமல் எனது திருமணத்தையும் தனது சொந்த செலவில் நடத்தி வைத்துள்ளார். பெற்றோரை இழந்த சகோதரிகளான நாங்கள் நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டபோது இறைவனிடம் எங்களுக்கு கருணை காட்டுமாறு வேண்டினேன். எங்க அப்பாவை (தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ) இறைவன் எங்களுக்கு அடையாளம் காட்டிவிட்டார். இந்த திருமண விழாவில் எங்க அப்பா கலந்து கொண்டது எங்கள் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகும் என்று கண்ணீர் மல்க கூறினார்.
தன்னிடம் உதவி கேட்ட பெண்ணின் சோக கதையை கேட்டதும் அவருக்கு தந்தையாக இருந்து அவரது வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் பொன்ராஜ் ஆலிவரின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். நாமும் அவருடைய செயலை பாராட்டுவோம்.