திருப்பூர், ஜூன் 30 –
ராக்கியாபாளையம் பகுதியில் நூறு வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்த கோவிலானது இருந்து வருகிறது. இங்கு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த அப்பகுதியை சேர்ந்த 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் 100 ஆண்டுகளாக
இந்த கோவிலில் வழிபட்டு வரும் சூழ்நிலையில் கடந்த 17 வருடங்களாக இந்த கோவிலின் தலைவராகவும் ரங்கசாமி என்பவர் இருந்து கொண்டு கோவிலை நிர்வகித்துக் கொண்டு வருகிறார்.
இதனிடையே கோவிலில் உள்ள லாக்கரில் கோவிலுக்கு சொந்தமான 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 125 பவுன் தங்க நகைகளை வார்டு செயலாளர் பத்ரன் தலைமையில் ராஜன், ரவி, உள்ளிட்ட ஐந்து பேர் கோவில் நிர்வாகிகள் யாருக்கும் தகவல் கொடுக்காமல் கையாடல் செய்து விட்டு சென்றதாகவும் இதுகுறித்து வார்டு செயலாளர் பத்திரனிடம் ஊர் பொதுமக்கள் கேட்டபோது முறையாக பதில் அளிக்காமல் பணத்தையும் நகையும் திருப்பிக் கொடுக்காமல் சாக்கு போக்கு சொல்லி வருவதாக கூறப்படுகிறது.
எனவே கோவிலுக்கு சொந்தமான நகைகள் மற்றும் பணத்தை உடனடியாக மீட்டு தர வலியுறுத்தி கோவில் லாக்கர் உடைக்கப்பட்ட வீடியோக்களை ஆதாரங்களாக வைத்துக்கொண்டு அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் மனு அளித்தனர்.
இதனிடையே கோவில் கடந்த இரண்டு வருடங்களாக பூட்டப்பட்டு சரியாக பராமரிக்காமல் வந்ததால் பொதுமக்கள் சிலரை வைத்து அவர்கள் முன் லாக்கர் உடைக்கப்பட்டதாக பத்திரன் தெரிவித்தார்.