ராமநாதபுரம், ஜுன் 30 –
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஆர் எஸ் மங்கலம் தாலுகா சுற்றுவட்டார ஜமாத் நிர்வாகிகள் உலமாக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொண்டியில் வடக்குத்தெரு சமுதாய நலகூடத்தில் நடந்தது. திருவாடனை வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் அயுப் கான் தலைமையில் நடைபெற்றது.
ஆலிம் முஹம்மது ருஸ்தின் தாவூதி ஆலிம் கிராத் நிகழ்த்தினார். தலைவர் ராமநாதபுரம் மாவட்டம் ஜமாத்துல் உலமா சபை தலைவர் முஹம்மது ஜலாலுதீன் அன்வாரி ஆலிம் வரவேற்புரை நிகழ்த்தினார். வட்டார ஐக்கிய ஜமாத் செயலாளர் கிராம நிர்வாக அலுவலர் ஃபாருக் தொகுத்து வழங்கினார். திருவாடனை வட்டாரம், ஆர் எஸ் மங்கலம் வட்டாரம் மற்றும் தொண்டி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள் தமுமுக மாநில செயலாளர், தொண்டி கிழக்கு தெரு ஜமாத் செயலாளர், தொண்டி சாதிக் மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மைதீன் சேட்கான் தொடக்க உரை நிகழ்த்தினார்.
மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர், மாநில ஹஜ் கமிட்டி தலைவர், வக்பு வாரிய உறுப்பினர், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினரும் ப அப்துல் சமது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது: வக்பு திருத்த சட்டம் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், மதரசாக்கள், அடக்கஸ்தலங்கள் உள்ளிட்ட வகுப்புகளை சூறையாடும் நோக்கில் அவசர கதியில் ஒன்றிய பாசிச பாஜக அரசு இரவு நேரத்தில் இயற்றப்பட்ட சட்டம் தான் வகுப்பு ஒழிப்பு சட்டம்.
ஒரு தனிநபர் தனக்கு அறிமுகம் இல்லாதவர்களுக்கு காலம் தோறும் உதவிடும் ஒரு புரட்சிகர சமூக நல்வாழ்வு திட்டமாக நபிகளார் அறிமுகப்படுத்திய வக்பு முறையை சிதைக்கும் தீய எண்ணத்தில் அவசரக் கோலத்தில் கொண்டு வந்த திட்டம் தான் வக்பு திருத்த சட்டம் ஆகும். பாசிச பாஜக அரசு அவசரக் கதியில் கொண்டு வந்த இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். உச்ச நீதிமன்றம் இந்த சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்திருந்த போதிலும் ஒன்றிய வக்பு வாரியம் சென்ட்ரல் வக்பு போர்டு ஜூன் மாதம் 6 ஆம் தேதி முதல் எல்லா மாநிலத்தின் வக்பு வாரியங்களும் அவர்களுடைய சொத்துக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க நீதிமன்ற அவமதிப்பாகும்.
இந்த நாசக்கார திட்டங்களை தவிடு பொடியாக்க அனைத்து ஜமாத்தார்களும் உலமாக்களும் இந்த அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நினைக்கும் நல் உள்ளம் கொண்ட அனைவரும் ஒருமித்த குரலாக ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் மதுரையில் ஜூலை 6 ல் அனைவரும் கலந்து கொள்ள ஆர்வம் ஏற்படுத்த வேண்டும். மேலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. உலகிலேயே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் முதன்மையான நாடாக இந்தியா திகழ்கிறது. ஆனால் இந்திய நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து கொண்டே செல்கிறது. இதன் பின்னணியில் திட்டமிட்ட சில சூழ்ச்சிகள் இயங்கி வருகின்றன.
2006ல் கொடுக்கப்பட்ட நீதி அரசர் சச்சார் ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டு இன்று மேலும் வலுவடைந்துள்ளது. சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் போக வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய மக்கள் வாழக்கூடிய தொகுதிகள் முதல் கட்டமாக ராஜேந்திர பிரச்சார அறிவித்த அந்த ஆய்வு அறிக்கை பரிந்துரையை நடுநிலை படுத்த வேண்டும். அதிகமாக வாழக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அவர்களுக்கான தொகுதிகளை சிறுபான்மை மக்கள் வெற்றி வாய்ப்பு பெறக்கூடிய வகையில் அந்த தொகுதிகளை இணைத்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் மறுவரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுரை மாநகரில் ஜூலை 6 ஆம் தேதி மாபெரும் பேரணியும் மாநாடும் நடைபெற இருக்கின்றன.
லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த லட்சிய பேரணி மாநாட்டில் அனைத்து ஜமாத் உடைய நிர்வாகிகளும் உறுப்பினர்களும் உலமாக்களும் அறிஞர் பெருமக்களும் அனைத்து மக்களும் வருவதற்கு உண்டான ஏற்பாடுகளை இந்த நாட்டினுடைய அரசமைப்புச் சட்டத்தை காப்பதற்கும் நமது உரிமையை மீட்டெடுப்பதற்கும் அனைவரும் வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை வட்டார ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் ஆலோசனையோடு தொண்டி ஐக்கிய ஜமாத் துணைத் தலைவர், வழக்கறிஞர் ஜிப்ரி, அலுவலக மேலாளர்கள் அக்பர் சுல்தான், ஆபித் காதர், பரக்கத் அலி மைதின் ஆகியோர் செய்திருந்தனர். ஆர்.எஸ் மங்கலம் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் புரோஸ்கான் நன்றி கூறினார்.