இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) சரர் ஆட்சியர் அபிலாஷா கௌர் தலைமையில் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 1434 பசலிக்கான ஜமாபந்தி 20.05.2025 தேதி முதல் 29.05.2025 தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக
பரமக்குடி வட்டத்திற்கான ஜமாபந்தி பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் சார் ஆட்சியர் அபிலாஷா கௌர் தலைமையில் வட்டாட்சியர் வரதன் முன்னிலையில் நடைபெறுகிறது.
இந்த ஜமாபந்தியில் பரமக்குடி சுற்று வட்டாரத்தை சார்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் முறையாக பரீசிலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
இந்த நிகழ்வில் வட்டாசியர் (ச.பா.தி) பரமசிவம், மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள், வருவாய் அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஜமாபந்தி வாயிலாக, “பொதுமக்கள் தங்கள் நிலம், வரி, வருவாய் சம்பந்தப்பட்ட குறைகள், கோரிக்கைகள், மனுக்களை நேரடியாக அதிகாரிகளிடம் அளித்து தீர்வு காண முடியும்; மேலும், ‘வருவாய், நில உரிமை மற்றும் நிர்வாக ஒழுங்குகள் தொடர்பான விவகாரங்களை சரிசெய்வதற்கும் இது நல்வாய்ப்பாகும்; எனவே, பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த வருவாய் தீர்வாயத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்” என பரமக்குடி வட்டாட்சியர் வரதன் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.