மார்த்தாண்டம், மே. 16
மார்த்தாண்டம் அருகே நட்டாலம், இட விளாகம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் – ஜெயலட்சுமி தம்பதியர் மகள் சௌபர்ணிகா (11). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சதீஷ் (37) இவர் ஆட்டோ டிரைவர். இவருக்கும் 11 வயதில் மகள் உள்ளார்.
சம்பவ தினம் சதீஷின் மகள் சௌபர்ணிகாவை அவதூறு பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த ராதாகிருஷ்ணன் உடனே சதீஷின் வீட்டுக்கு சென்று தட்டி கேட்டுள்ளார். அப்போது இருதரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் சதீஷ் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று மதியம் ராதாகிருஷ்ணனும் ஜெயலட்சுமியும் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் சௌபர்ணிகா தனது உறவினர் பிள்ளைளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் திடீரென செளபர்ணிகாவை பார்த்து கெட்ட வார்த்தையில் பேசியதோடு, சிறுமியின் கன்னத்தில் பளார் என அறைந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதில் சௌபர்ணிகா காயமடைந்தார். இதையடுத்து வெளியே சென்றிருந்த சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது காயமடைந்த மகள் சௌபர்ணிகாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். இது குறித்து ஜெயலட்சுமி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிறுமியை தாக்கிய சதீஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.