ராமநாதபுரம், டிச.23-
பனி காலங்களான
மார்கழி மாதத்தில் தொடங்கி மாசி மாதம் வரை கடுமையான குளிர் மற்றும் பனியால் சளி மற்றும் மூக்கு அடைப்பு ஏற்பட்டு அவதியுறும் நிலையில் இருந்து தற்காத்து கொள்ள பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
அவர் இது குறித்து கூறுகையில்:
பனி காலமான மார்கழி மாதம் முதல் மாசி மாதம்நடைபெறும் வரை கடுமையான குளிர் மற்றும் பனியால் அவதி அடையும் நிலையை
நாம் அடைவோம். அதுவும் விடியற்காலையில் எழுவோருக்கு மிக சிரமமாக இருக்கும். வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மிகுந்த பாதிப்பை தரும் காலமாக இது இருக்கும். இரவு படுக்கும்போது நன்றாக இருப்பவர்கள் காலை எழும்போது சளி பிடித்துக்கொண்டும் மூக்கு அடைப்போடும் எழுவார்கள். திடீரென இது ஏற்படுவதால் செய்வதறியாது மருந்துகளை நாடுவோம்.
இப்படி பனிக்காலத்தில் ஏற்படும் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள இரவில் நல்ல காட்டன் போர்வைகளைக் கொண்டு போர்த்திக் கொண்டு உறங்கவும். சிலருக்கு எவ்வளவு குளிராக இருந்தாலும் ஃபேன் இல்லாமல் தூக்கம் வராது… இப்படிப்பட்ட பழக்கம் உள்ளவர்கள் காதுகளையும் இரு கால்களையும் நன்றாக காற்று புகாமல் மூடி கவர் செய்து கொண்டு தூங்கவும்.
முடிந்த அளவு சுடுத்தண்ணீரை குடிக்கவும் குளிக்கவும் பயன்படுத்தவும். உணவுகளை சற்று சூடாக சாப்பிடவும். ஜூஸ்,மற்றும் ஐஸ் கிரீம் சாப்பிடுவதை தவிர்க்கவும். குளிக்க சுடுத்தண்ணீர் பயன்படுத்த விரும்பாத நபர்கள் வெயில் கிளம்பியதும் குளிப்பது நன்று. வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து சீயக்காய் தேய்த்து குளிப்பது நன்று.
சளி பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும் மதியவேளை உணவில் தூதுவிளை சேர்த்து புளித்துவையலை சேர்த்துக் கொள்வதும் வாரம் ஒருமுறை சித்தரத்தை கஷாயம் வைத்து குடிப்பதும் நன்று… இந்த காலத்தில் இறால் மற்றும் நண்டு வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதும், நல்லெண்ணெய், எள்ளு மிட்டாய், அன்னாசி பழம் , காய்கறி சூப், ஆட்டுக்கால் சூப் குடிப்பதும் நன்மை பயக்கும்…
எந்த மருந்து சாப்பிடுவதாக இருந்தாலும் சுடுத்தண்ணீர் அல்லது தேனில் மட்டும் கலந்து சாப்பிட வேண்டும்..இல்லை என்றால் மருந்துப் பொருட்கள் செரிமானம் ஆகாது.
நரம்புகள் நன்றாக விரைப்புத்தன்மையுடன் காணப்படும் காலம் இது. இதனால் முதியவர்கள் மூட்டு வலியால் அவதியுறுவர். இவர்கள் சுடுத்தண்ணீரைக் கொண்டு ஒத்தடம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அல்லது மணல் ஒத்தடம் கொடுக்கவும்.
ஆஸ்துமா நோயாளிகள் எக்காரணம் கொண்டும் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட கூடாது. காது மற்றும் மூக்கில் பனிக்காற்று புகாமல் இருக்கி மூடி பாது காக்க வேண்டும்.
ஊறுகாய் உண்பதை தவிர்க்க வேண்டும்,
இவ்வாறு பிரபல ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை வழங்கியுள்ளார்.