கன்னியாகுமரி அக் 19
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் அரசுக்கு வரும் வருவாயை இழப்பீடு செய்பவர்கள் மீது புகார் அளித்த காரணத்துக்காக என்மீது போலீஸார் பொய்வழக்கு பதிவு செய்துள்ளனர் என பேரூராட்சி தலைவர் சொ.முத்துக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக கனிமவள பாரங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஏற்படும் விபத்துக்களால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும், சாலைகளும் மிக மோசமாக பழுதடைந்து வருகிறது.
இதனை தடுக்க சமூக ஆர்வலர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்தது. இதையடுத்து கனிமவள அதிகாரிகள் ஆரல்வாய்மொழி பகுதியில் எடைமேடை அமைத்து கண்காணிப்பதாக பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்த எடைமேடையில் அனைத்து கனரக வாகனங்களும் எடை பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி சார்பில் எடைமேடை அமைக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த எடை.மேடையை குறிப்பிட்ட காலத்துக்குள் அமைக்க விடாமல் உள்ளூர் அமைச்சரின் தலையீடு இருந்தது. மேலும், பேரூராட்சிக்கு வரும் வருவாயை தடுக்கும் வகையில் அமைச்சர் உதவியுடனும், காவல்துறை ஒத்துழைப்புடனும் தனியார் எடைமேடை அமைத்து கனரக வாகனங்கள் அனைத்தும் தனியார் எடைமேடையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பீடு ஏற்பட்டது.
இதையடுத்து பேரூராட்சி தலைவர் என்ற முறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தேன். இதையடுத்து அரசுக்கு வரும் வருவாயை எந்த வகையிலும் இழப்பீடு செய்யக்கூடாது என மாவட்ட எஸ்.பி.ஆரல்வாய்மொழி காவல்துறை ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் பேரூராட்சி எடைமேடையில் மீண்டும் வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் காவல்துறை அதிகாரிகளுக்கு என்மீது தனிப்பட்ட விரோதம் ஏற்பட்டது. இதில் உளவுத்துறை அதிகாரி ஒருவர் எனக்கு எதிராக பகிரங்கமாக செயல்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஆயுதபூஜை நாளன்று ஆரல்வாய்மொழி சந்திப்பில் ஒரு விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த நபரை மருத்துவமனையில் சேர்ந்து விட்டோம் ஆனால், இந்த விபத்துக்கு காரணமாக இருந்த ஓட்டுநர் என்னை ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவரும், அவரது கார் ஓட்டுனரும், கவுன்சிலர் ஒருவரும் சேர்ந்து தாக்கியதாகதாகவும், விபத்துக்கு காரணமான லாரியை தாக்கியதாகவும் பொய்புகார் அளித்துள்ளார்.
இதன் பேரில் என்மீது காவல்துறையினர் பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேரூராட்சி தலைவர் என்ற முறையில் புகார் அளித்ததற்காகவும், நான் அதிமுகவைச் சேர்ந்தவர் என்ற காரணத்துக்காகவும் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.