நாகர்கோவில் செப் 27
கன்னியாகுமரி மருத்துவ ஆராய்ச்சி மிஷன் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையம் விடுத்த அறிவுறுத்தலின்படி அரசுப் பள்ளி மாணவா்கள் 5 பேருக்கு எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள 95 இடங்களானது தரவரிசைப்படி இரண்டாம் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கி இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. காலியாக உள்ள இடங்கள் மூன்றாம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படவுள்ளன. முதல் சுற்று கலந்தாய்வின்போது தேசிய மருத்துவ ஆணையத்திடமிருந்து அறிவுறுத்தல் கடிதம் ஒன்று, மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்துக்கு வந்தது. அதில், கன்னியாகுமரி மருத்துவ மிஷன் ஆராய்ச்சி மைய கல்லூரி வளாகம் அமைந்துள்ள நிலத்துக்கு உரிமை கோரி மனுதாரா் ஒருவா் தில்லி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால், அக்கல்லூரிக்கு அனுமதிக்கப்பட்ட 100 எம்பிபிஎஸ் இடங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதனால், அங்கு மாணவா் சோ்க்கை நடத்த வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. நீதிமன்ற உத்தரவு: முன்னதாகவே, அந்த கல்லூரியில் 95 இடங்கள் தற்காலிக ஒதுக்கீடாக மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும், 5 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டிருந்தது. தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில், 95 இடங்கள் திரும்பப் பெறப்பட்டன. அரசுப் பள்ளி மாணவா்கள் 5 பேருக்கு வேறு கல்லூரிகளில் இடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே, உயா் நீதிமன்ற ஆணைப்படி, அந்த கல்லூரிக்கு 100 எம்பிபிஎஸ் இடங்களைத் திரும்ப வழங்க தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியது. இதையடுத்து, இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கன்னியாகுமரி மருத்துவ மிஷன் ஆராய்ச்சி மைய கல்லூரியின் 95 இடங்கள் சோ்க்கப்பட்டன. அதேபோன்று, அரசுப் பள்ளி மாணவா்களான எம்.சொணலதா, வி.வினோதா, ஏ.ஐஸ்வா்யா, ஷகிலா பானு சுஜிதா, இ.அனுசுயா ஆகிய 5 பேருக்கு அதே கல்லூரியில் மீண்டும் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.