நாகர்கோவில் ஜூலை 19,
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி, பள்ளிக்கூட மாணவ, மாணவியர்களுக்கு, காவல்துறையின் செயல்பாடுகள் மற்றும் சாலை போக்குவரத்து விதிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “ஓபன் ஹவுஸ்” எனப்படும் நிகழ்ச்சி நேற்று நாகர்கோவில் ஆயுதப்படையில் வைத்து நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வடலிவிளை வாழயத்து வயல், குறத்தியறை ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தை சுற்றிப் பார்த்தனர். ஆயுதப்படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான போக்குவரத்து பூங்கா சுற்றி காண்பிக்கப்பட்டு சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய்கள் பிரிவு, போலீசார் பயன்படுத்தும் ஆயுதங்கள் பிரிவுகள் மாணவ மாணவிகளுக்கு செயல்முறை விளக்கத்துடன் காண்பிக்கப்பட்டது. காவல்துறையின் கவாத்து தொடர்பான செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது பள்ளி மாணவ மாணவியர்களுக்கு, காவலர்கள் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்த நல்லெண்ணத்தை ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை விதிகளின் முக்கியத்துவம் குறித்து சிறு வயதிலேயே தெரிந்துகொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்நிகழ்வில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், மாவட்ட குற்ற ஆவண காப்பக காவல்துணை கண்காணிப்பாளர் கோவிந்தன், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர் சுமித் ஆல்ட்ரின் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.