சென்னை , நவ. 11.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, தவெகவின் ஆறு மாத கால ஆட்சியை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் விஜய் சட்டம் – ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், சென்னை அபிராமபுரம், காசிமேடு, செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நாளில் மூன்று கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தீபாவளி தினத்தன்று நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு அமைச்சர் பதிலளித்ததை விமர்சித்துள்ள அவர், அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் கொலைகளுக்கு எந்த ஆண்டின் புள்ளிவிவரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக காவல்துறை ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ரவுடிகளைக் கைது செய்ததாக செய்திகள் வெளியான அதே நேரத்தில் சென்னையில் கொலைச் சம்பவங்கள் நடைபெற்றிருப்பது, காவல்துறை மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அன்றாடம் நடைபெறும் வெட்டுக்குத்து, பழிக்குப்பழி கொலைச் சம்பவங்களால் தமிழகம் ரத்தக் களறியாக மாறியுள்ளதாகவும், பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பாதுகாப்பே அரசின் அடிப்படைக் கடமை என்பதை வலியுறுத்திய டிடிவி தினகரன், வெறும் அறிக்கைகளையும் செய்திக் குறிப்புகளையும் வெளியிடுவதற்குப் பதிலாக, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கைச் சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



