ஈரோடு, டிச. 23 –
ஈரோடு மாவட்டம் அத்தாணி கைகாட்டி பெருமாள் கோயில் பகுதியை சேர்ந்தவர் பூபதி (21). மாகாளி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நவீன் குமார். இவர் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல தலைவர் ஜாபர் அலி தலைமையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு மனு கொடுத்து உள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: கோபி அருகே உள்ள பொலவக்காளி பாளையம் என்ற இடத்தில் சென்ற போது என்னையும் எனது நண்பர் ரஞ்சித் குமாரரையும் அங்கிருந்த சிலர் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் ரஞ்சித் குமார் கையில் முறிவு ஏற்பட்டது. இது பற்றி தகவல் தெரிந்து வந்த எங்களது நண்பர்களையும் எங்களையும் சாதி பெயரை கூறி இழிவாக பேசி தாக்கினர். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்.
எங்களது பெற்றோர் வந்து பேசிய பிறகு தான் அவர்கள் எங்களை விடுவித்தனர். மறுநாள் காலை எங்களை பற்றி ஆடு திருடர்கள் என்று பொய்யாக சித்தரித்து வலைதளங்களில் பொய்யான செய்தியை பரப்பினர். இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். எங்கள் மீது பொய்யான திருட்டு பழியை சுமத்தி வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



