நாகர்கோவில், நவம்பர் 19 –
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அமீபிக் மூளைக்காய்ச்சல் ‘நெய் கொளேறியா பொலேரி’ என்ற அமீபாவால் ஏற்படுகிறது. மாசடைந்த, தேங்கி நிற்கும், சுத்தம் இல்லாத நீர் நிலைகளில் இந்த கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய நீர் நிலைகளில் குளிக்கும்போது அமீபா கிருமி மூக்கு வழியாக மூளைக்கு சென்று தொற்று ஏற்படுத்தும்.
இந்நோய் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவாது. கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, கழுத்து வலி, வலிப்பு, மயக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். சரியான சிகிச்சை இல்லையெனில் உயிர் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் மாசடைந்த நீரில் குளித்தல், விளையாடுதலை தவிர்க்க வேண்டும். மூளைக்காய்ச்சல் அறிகுறிகள் நீர் நிலைகளில் குறித்த பிறகு தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கொதிக்க வைத்த நீரை குடிக்க வேண்டும். கேரளம் செல்லும் பக்தர்கள் புனித நீராடும் போது கண், காது மற்றும் மூக்கை பாதுகாப்பாக மூடி குளிப்பது நல்லது. பொதுமக்கள் நோய்க்குறித்து பயப்படத் தேவையில்லை.


