நிலக்கோட்டை, செப். 30 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர்
கரிகாலபாண்டியன். தீவிர திமுக விசுவாசியான இவர் கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மனின் மீதும் அளவற்ற பக்தி கொண்டதால் கடந்த இருபது ஆண்டுகளாக மாதம் தோறும் விரதமிருந்து கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து வந்தார். தொடர்ந்து நவராத்திரி, சிவராத்திரி மற்றும் மாசி மஹோச்சவம் உள்ளிட்ட பண்டிகைகள் மற்றும் கேரளாவில் நடைபெறும் பண்டிகை நாட்களிலும் அம்மனுக்கு அர்ச்சனை பூக்கள் முதல் தோரணை, அலங்கார பூக்கள் வரை தினமும் டன் கணக்கில் பூக்களை மாலையாக கட்டி அனுப்பி வந்தார்.
இதேபோல சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி விழாவிற்கும் கரிகாலபாண்டியனின் குடும்பத்தினர் அனைவரும் விரதமிருந்து அம்மனுக்கு தினமும் ஒரு டன் அளவிலான பூக்களை கட்டி மாலையாக அனுப்பி வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நவராத்திரி விழாவில் ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியனுக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் சிறந்த ஆன்மீகச் செம்மல் விருது வழங்கி கௌரவித்துள்ளனர். இதனால் திமுகவினர், பொதுமக்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்களுடைய மிகுந்த நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.



