நாகர்கோவில், ஜூன் 2:
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என இரண்டு போக சாகுபடி நடைபெறுகிறது. கன்னி பூ சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த ஆண்டு போதிய மழை அளவு இருந்ததால் அணைகள் மூடப்படும் நேரத்தில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் இருந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கோடை மழையால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. இதே போல் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக தொடங்கி பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் சீரான அளவு உயர்ந்து வருகிறது.
பேச்சுப்பாறை அணை (48 அடி கொள்ளளவு) நீர்மட்டம் 43.64 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1036 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை (77 அடி கொள்ளளவு) நீர்மட்டம் 56.89 அடியாக உள்ளது. அணைக்கு ஆயிரத்து10 கன அடி நீர் உள் வரவாக உள்ளது.
ஜூன் முதல் வாரத்தில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜூன் 1ம் தேதி பாசனத்திற்காக அணைகளை திறக்க உத்தரவிட்டார். இதயடுத்து நேற்று காலை 10:30 மணிக்கு பேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி தண்ணீர் கோதையார் இடது கரை கால்வாயில் திறக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் அழகுமீனா பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் மதகை திறந்து வைத்தார். இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் மூர்த்தி, உதவி பொறியாளர் பொன் செல்வகுமார், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதை அடுத்து கலெக்டர் அழகுமீனா கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாறு மற்றும் பட்டாணங்கால் வாய் பாசனத்திற்காக பேச்சுப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, மற்றும் சிற்றார் 2 அணைகளில் இருந்து நேற்று முதல், அடுத்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை வினாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளார்.
இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், கிள்ளியூர், திருவட்டார், விளவங்கோடு, மற்றும் அதனைச் சார்ந்த கிராமங்களில் உள்ள 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதில் 14 ஆயிரம் ஏக்கர் நெல் விவசாயம், 15 ஏக்கர் வாழை விவசாயம், 50 ஆயிரம் ஏக்கர் தென்னை விவசாயம் உள்ளது.
விவசாயிகள் தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். பாசன கால்வாய்களில் இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு வேகமாக பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கடை பரம்பு பகுதிக்கு சென்று சேர ஒரு மாதம் ஆகும். அதற்குள் கடை வரம்பு பகுதியில் உள்ள கால்வாய்களில் பராமரிப்பு, தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும்.
பேச்சுப்பாறை அணையை தூர் வாருவது நீண்டகால செயல் திட்டம் ஆகும். இது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதற்கான ஆய்வு பணி நடந்து வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் முறையாக அறிவித்த பின்னர் விரைவில் பேச்சுப் பாறை அணையை தூர்வாரும் பணி தொடங்கப்படும். இவ்வாறு கலெக்டர் அழகுமீனா கூறினார்.