நாகர்கோவில் – நவ – 14,
புனே – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 10-ந் தேதியன்று இரவு புனேவில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. அந்த ரெயில் முழுவதும் கன்னியாகுமதி ரெயில்வே போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையிலான போலீசாரும் சோதனை நடத்தினர்.
அப்போது ரெயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் கறுப்பு நிற பை ஒன்று கிடந்தது. அதை போலீசார் திறந்து சோதனை செய்ததில் இரண்டு பார்சல்கள் இருந்தன. அதனை பிரித்து பார்த்த போது எதில் 4.80 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கஞ்சா பார்சல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்த நபர் யார் என்பது குறித்தும் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்.