சென்னை, ஆகஸ்ட் 29 –
வடபழனி காவேரி மருத்துவமனை “காவேரி – எஸ்.ஏ.சி” என்ற பிரத்யேக விளையாட்டு மருத்துவம் மற்றும் ஆர்த்ரோஸ்கோபி மையத்தை தொடங்கியிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
எலும்பியல் சிகிச்சை நிபுணர் ரவி சங்கர் கிருபானந்தன் இதுகுறித்து தெரிவித்ததாவது:
ஆர்த்ரோஸ்கோபி என்பது உயர் தெளிவுத்திறன் கொண்ட “3டி” கேமராக்கள் மற்றும் சிறப்பு உபகரணங்களின் உதவியுடன் சிறிய துளைகள் வழியாகச் செய்யப்படும் ஒரு சிகிச்சை முறையாகும். திறந்த அறுவை சிகிச்சைகளுடன் ஒப்பிடுகையில் ஆர்த்ரோஸ்கோபி முறையிலான சிகிச்சை நோயாளிகளை 50% வரை வேகமாக குணமடையச் செய்வதுடன் பக்கவிளைவுகளின் விகிதத்தையும் கணிசமாகக் குறைக்கிறது.
இளம் விளையாட்டு வீரர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை தொடர்ச்சியான மூட்டு வலி, மூட்டுகளின் நிலையற்ற தன்மை அல்லது காயங்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சை செயல்முறையை எளிதில் அணுகக்கூடியதாக இருக்கும் என்றார்.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில்: இந்த சிகிச்சை மையம், மேம்பட்ட தொழில்நுட்பம், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் மற்றும் ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனித்துவமான மற்றும் சிறப்பான மறுவாழ்வு செயல்பாடுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்திருக்கிறது. இதன் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு ஆர்த்ரோஸ்கோபி சிகிச்சை செயல்முறைக்கான ஒரு உலக தரம் வாய்ந்த மையம் இயங்குவதை உறுதி செய்கிறது. உலக தரம் வாய்ந்த மூட்டுப் பாதுகாப்பு மற்றும் சிகிச்சை வசதிகள் வடபழனியிலேயே இப்போது கிடைக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர் விளையாட்டு மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில், “விளையாட்டில் காயங்கள் ஏற்படுவது இயல்பானது; ஆனால் அதிலிருந்து மீண்டு வருவதுதான் ஒருவரின் வாழ்க்கையை வரையறுக்கிறது. காவேரி – எஸ்.ஏ.சி போன்ற ஒரு மையம் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமின்றி அதே தரமான சிகிச்சைக்குத் தகுதியான ஒவ்வொரு தனிநபரையும் மையமாகக் கொண்டிருப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது. இந்த சிகிச்சை மையத்தில் வழங்கப்படும் ஆர்த்ரோஸ்கோபி செயல்முறையும் விளையாட்டு மருத்துவமும் இணைந்து எண்ணற்ற நபர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த மையம் சென்னையின் விளையாட்டு மற்றும் மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.



