விழுப்புரம், செப்டம்பர் 19 –
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இலட்சுமணன் முன்னிலையில் தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் கழிவு செய்யப்பட்ட பொருட்களை தரம் பிரித்து அகற்றும் பணியினை தொடங்கி வைத்து தூய்மை உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் உள்ள காகித குப்பைகள், பயன்பாடற்ற கண்ணாடி பொருட்கள், மின்னணுக்கழிவுகள், உடைந்த மரச்சாமான்கள், உபயோகமற்ற தளவாடப்பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்து கழிவு பொருட்களுக்குரிய தொகையினை அரசுக் கணக்கில் செலுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இன்றையதினம், விழுப்புரம் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், அரசு அலுவலகங்கள் வளாகத்தில் உள்ள பயன்படுத்தப்படாத கழிவுப் பொருட்கள் தரம் பிரித்து மக்கும், மக்காத மற்றும் பயன்பாடு இல்லாத பொருட்கள் பிரித்து வைக்கப்பட்டது. அனைத்து அலுவலங்களிலும் கழிவு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு தூய்மையாக பராமரிக்கப்பட்ட வேண்டும் என அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், சேகரிக்கப்பட்ட பொருட்கள் எடையிடப்பட்டு இணையதளத்தில் பதிவு செய்து, கழிவு பொருட்களுக்குரிய தொகையினை அரசுக் கணக்கில் செலுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இதனைதொடர்ந்து அலுவலகம் மற்றும் அதன் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பத்மஜா,வேளாண்மை இணை இயக்குநர் சினிவாசன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் வசந்தி, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் உட்பட பலர் உள்ளனர்.



