களியக்காவிளை, ஜன. 13 –
மருதங்கோடு ஊராட்சியில் விளையாட்டு மைதானம் நடுவில் நிற்கும் மின் கம்பம் மற்றும் கம்பிகளை மாற்றி அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் சுரேஷ் மின்சார வாரிய அலுவலருக்கு புகார் மனு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மருதங்கோடு, புத்தன் சந்தையில் அமைந்துள்ள மின்சார வாரிய இளநிலை பொறியாளர்க்கு கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மருதங்கோடு ஊராட்சியில் செம்மங்காலை சானல் கரை ஓரம் பஞ்., நிர்வாகம் சார்பில் அரசுக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இந்த விளையாட்டு மைதானத்தில் அப்பகுதியை சார்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் விளையாடி வருகின்றனர்.
இந்த விளையாட்டு மைதானத்தின் நடுவில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சொந்தமான மின் கம்பம் மற்றும் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உள்ளன. இந்த மின்கம்பம் மற்றும் கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. ஆகவே இதனை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கொடுத்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.



