விளாத்திகுளம், ஆகஸ்ட் 9 –
மகாலட்சுமி மகா விஷ்ணுவை பிரியாமல் மகா விஷ்ணுவின் மார்போடு ஐக்கியம் ஆவதற்காகவும் பசு, மழை, இயற்கை, விவசாயம் உள்ளிட்ட வளங்கள் செழிப்பதற்காகவும் மகாலட்சுமி வரலட்சுமி நோன்பு சுமங்கலி பூஜை செய்வதாகவும் புராண காலங்களில் கூறப்படுகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பு மற்றும் ஆடி மாத நான்காம் வெள்ளி முழு பவுர்ணமி, சுமங்கலி பூஜையை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய வளாகப்பகுதியில் வரலட்சுமி நோன்பு சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 650 க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
கோவில் குருக்கள் வரலட்சுமி நோன்பு சுமங்கலி ஸ்லோகங்கள் கூற குங்குமம், வெற்றிலை, மஞ்சள் அடங்கிய மங்கள வாஸ்துகள், தேங்காய், பழம் அடங்கிய பூர்ண கும்பத்திற்கு ஸ்லோகங்கள் கூறி பெண்கள் வழிபாடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாதாரணை மற்றும் பஞ்சமுக தீபாதாரணை நடைபெற்றது.
இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாட்டினை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் திருக்கோவில் உழவாரப்பணியினர் ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.