நாகர்கோவில், ஜூலை 10 –
குமரியில் விபத்துக்களை குறைக்கும் வகையில் “நோ ஹெல்மெட், நோ என்ட்ரி” பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக பள்ளிகளில் ரோடு சேப்டி கிளப் தொடங்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி முதல் கட்டமாக நாகர்கோவில் டிராபிக் போலீசார் எல்கைக்கு உட்பட்ட 20 பள்ளிகளில் ரோடு சேப்டி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவிலில் நேற்று காலை நடைபெற்றது.
எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: குமரியில் கடந்த ஆண்டு 337 பேர் விபத்தில் உயிரிழந்து உள்ளனர். பைக் விபத்தில் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. விபத்து இல்லா மாவட்டமாக உருவாக்க மாணவர்கள், இளைஞர்கள் ஒத்துழைக்க வேண்டும். சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் பெரிய சக்தியாக மாணவர்கள் இருக்கின்றனர்.
ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் சமுதாய கடன், தேசப்பற்று மற்றும் ஒழுக்கம் மிக முக்கியமாகும். இதை உணர்ந்து மாணவ, மாணவிகள் இந்த சமுதாயத்திற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். எனவே, சாலை விதிகளை பின்பற்றுவதில் பிறருக்கு வழிகாட்டியாக மாணவர்கள் செயல்பட வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் தற்போது “ரோடு சேப்டி கிளப்” தொடங்கப்பட்டு இருக்கிறது.
இந்த கிளப்பில் இடம்பெற்று இருக்கக்கூடிய மாணவ, மாணவிகள் தங்களது பள்ளி எதிரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு மாணவ மாணவிகள் முறையாக சாலையை கடந்து வர உதவி செய்வார்கள். தங்களை ஒரு காவலராக அங்கீகரித்து கொண்டு இந்த பணியில் மாணவ மாணவிகள் கவனத்துடன் முழு வீச்சில் செயல்பட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் அமைந்துள்ள ரோடுகளில் வரக்கூடிய வாகனங்கள் எச்சரிக்கையுடன் அந்த பகுதியை கடக்க வேண்டும். சமூக வலைத்தளங்களை மாணவர்கள் தங்களது வாழ்க்கை வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் மனதையும் உடலையும் உற்சாகமாகவும் ஆரோக்கியத்துடனும் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநகர உதவி போலீஸ் சூப்பிரண்ட் லலித்குமார், மாநகர போக்குவரத்து ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின், அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் (வணிகம்) ஜெரோவின், போக்குவரத்து போலீசார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.