இராமேஸ்வரம், ஆகஸ்ட் 9 –
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் மாதந்தோறும் சமுத்திர ஆரத்தி குழுவின் சார்பில் பௌர்ணமி நாட்களில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சமுத்திரத்திற்கு ஆரத்தி செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆடிமாதம் பௌர்ணமியை முன்னிட்டு கலசம் வைத்து கலசத்திற்கு புனித நீர் ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் முழங்க தீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து வேதவிற்பனர்கள் சமுத்திரம் முன் நின்று 4 திசைகளிலும் சுற்றி தீபாராதனை காண்பித்து சமுத்திர ஆரத்தி காண்பித்தனர். அதன்பின் பூஜைகள் செய்யப்பட்டு வைத்திருந்த புனித நீரை கடலில் விட்டு வழிபாடு நடத்தினர். இந்த நிகழ்வில் உள்ளூர் பொதுமக்கள், பக்தர்கள், வடமாநில பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.