போகலூர், ஜுலை 4 –
ராமநாதபுரம் நகராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டக்கிளை அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் அறிக்கையில் கூறியதாவது: நாடு சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் முடிந்த நிலையிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்தப்படவில்லை. ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாததால் ராமநாதபுரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் ஏழை குடும்பங்களிலுள்ள மாணவர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை நகரிலுள்ள தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதால் ஏழை குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நகராட்சியில் பெண்களுக்கென்று தனியான நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. ஆனால், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லை. அரசுப்பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு உயர்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. ராமநாதபுரம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஏழை மாணவர்கள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படித்து வருவதால் அம்மாணவர்களுக்கு அரசு வழங்கும் 7.5% இட ஒதுக்கீடு பொருந்துவதில்லை.
இதனால் அப்பகுதி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து வருகின்றனர். எனவே, ராமநாதபுரம் நகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழை மாணவர்களும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திட ராமநாதபுரம் நகராட்சியில் இயங்கி வரும் இரண்டு நடுநிலைப்பள்ளிகளில் ஏதாவது ஒரு பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அடுத்த ஆண்டுகளில் அதனை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை ஏற்படுத்தி தரவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.