கன்னியாகுமரி, மே. 12-
தென்னக ரயில்வே துறைக்கு தென் மாவட்ட பயணிகள் முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளனர். எழும்பூரிலிருந்து கன்னியாகுமரிக்கு அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்பட்டு வருகிறது.. மாலை 5.15 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது, மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்தடையும். அதேபோல, மறுமார்க்கத்தில் கன்னியாகுமரியிலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு எக்மோர் வந்துவிடும்.
சென்னை: அதிவேக விரைவு என்பதால், உரிய நேரத்துக்கு இந்த ரயில் கன்னியாகுமரிக்கும், சென்னைக்கும் வந்துவிடுகிறது.. எனவே, நேரமும் மிச்சப்படுவதால், பயணிகளுக்கு இந்த ரயில், மிகவும் வசதியாக இருக்கிறது. அதனால்தான், எப்போதுமே இந்த ரயிலில் டிக்கெட் எடுப்பதற்கு படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
அதிலும், குமரியிலிருந்து சென்னைக்கு வருபவர்கள் அதிகாலை 5.30 மணிக்கு வந்துவிடுவதால், அவர்களால் எளிதாக அலுவலகம் கிளம்பி செல்லவும் வசதியாக இருக்கிறது. இதனால் பல்வேறு தரப்பினர், இந்த ரயிலை அதிகமாகவே நம்பி இருக்கிறார்கள்.
அதேபோல, தினமும் கன்னியாகுமரிக்கு இந்த ரயில் வந்தடைந்ததுமே, அங்கிருந்து நாகர்கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தம் செய்யப்படும்.. பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். அதற்கு பிறகு மாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கன்னியாகுமரி-சென்னை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்.12634) என்று சென்னைக்கு புறப்படும்.இந்த இடைபட்ட நேரத்தில், இந்த ரெயிலின் ரேக்குகள் பெங்களூரு-கன்னியாகுமரி ரெயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 மணிக்கு பெங்களூரிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ், மாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைந்ததும் அங்கிருந்து 5.30 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.ஆனால், பெங்களூரிலிருந்து வரும் ரெயில் தாமதமானால், கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு கிளம்புவதிலும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாகி விடுகிறதாம்.. இதற்கான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லையாம். சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸிலும், பராமரிப்பு செய்யப்படுவதில்லை என்கிறார்கள். 2 ரேக்கை மிச்சப்படுத்துவதற்காக, தங்களுக்கு ஏன் அசெளகரியத்தை தரவேண்டும் என்று பயணிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.. எனவே, முன்பிருந்ததைபோலவே, ரயில்களை இயக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், போராட்டத்தை முன்னெடுக்கவும் தயார் என்கிறார்களாம் தென் மாவட்ட பயணிகள்.