நாகர்கோவில், அக். 9 –
ஹோமியோபதி மருத்துவரின் தவறான அலோபதி மருத்துவ சிகிச்சையால் உயிரிழந்த மருத்துவ மாணவி ட்ரிஷா ஜினி. மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு கண்ணீர் மல்க எஸ் பி யிடம் குடும்பத்தார் புகார்.
குமரி மாவட்டம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் இருதய ஜான். இவர் அரசு போக்குவரத்து கழக கன்னியாகுமரி டிப்போவில் தொழில்நுட்ப பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உண்டு. இவருடைய இளைய மகள் ட்ரிஷா ஜினி ஹோமியோபதி மருத்துவராக இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த 15/09/2025 அன்று காய்ச்சல் இருப்பதாக கூறி வீட்டின் அருகில் உள்ள ஹோமியோபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். 17 ஆம் தேதி மருத்துவக் கல்லூரி வகுப்பிற்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு திரும்பிய ட்ரிஷா ஜினிக்கு காய்ச்சல் இருந்ததால் மாலை அதே ஹோமியோபதி மருத்துவமனைக்கு அவரின் தகப்பனார் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவளை பரிசோதித்த டாக்டர் 101 டிகிரி காய்ச்சல் இருப்பதாக கூறி ஹோமியோபதி மருத்துவத்தை செய்வதற்கு பதிலாக அலோபதி மருத்துவம் செய்து ஊசி போட்டும், குளுக்கோஸ் மூலம் ஊசி மருந்தும் கொடுத்துள்ளார். ஆங்கில மருத்துவத்தில் சுமார் அரை மணி நேரம் செலுத்தப்பட வேண்டிய குளுக்கோஸ்சை ஆறு நிமிடத்தில் உடலுக்குள் நரம்பு வழியாக செலுத்தியுள்ளார். எனவே ட்ரிஷா ஜினிக்கு வலிப்பு வந்தும்,
வாந்தி எடுத்தும் வாய் மற்றும் மூக்கு வழியாக நுரை தள்ளியும் சுயநினைவு இழந்துள்ளார். உடனே மருத்துவர் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துள்ளார்.
எந்த ஒரு அசைவும் இன்றி இருந்த மகளை பரிசோதித்த அந்த மருத்துவர் உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல கூறி அங்குள்ள ஆம்புலன்ஸில் அனுப்பி உள்ளார். அரசு மருத்துவமனையில் அவளை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவள் இறந்து விட்டதாக தெரிவித்தார். பின்னர் உடல் கூராய்வு செய்யப்பட்டது.
அலோபதி மருத்துவ சிகிச்சை செய்வதற்கு எந்த ஒரு உரிமையும் இல்லாத ஹோமியோபதி மருத்துவர் தனது மகளுக்கு தவறான மருத்துவ சிகிச்சை அளித்து அவளை கொன்று விட்டார். எனவே மகளைக் கொன்ற மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து எனது மகளின் இறப்பிற்கு நீதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்ணீர் மல்க புகார் அளித்தார்.



