தஞ்சாவூர், ஜூலை 22 –
மக்கும் தன்மையுள்ள பொருள்களை பயன்படுத்தும் உணவு வணிகர்களுக்கு பரிசு தொகையுடன் விருது வழங்கப்படும். இதற்கு அடுத்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலர்கள் ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், வணிகர்கள் சங்கம், பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பேசியதாவது: மாவட்டத்திலுள்ள உணவகங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், உணவு வினியோகம் செய்யும் விடுதிகளில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் மறு சுழற்சி முறையில் பயன்படுத்துவதை தடுக்கும் பொருட்டு மேற்படி எண்ணெயை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயோடீசல் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றது. இது சம்பந்தமாக உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசால்தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் ஆகியவற்றை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாமல் மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை மட்டும் உணவு வினியோகிப்பதற்கும் பார்சல் செய்யவும் பயன்படுத்தும் மிக சிறந்த உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு துறையால் ரூபாய் 1 லட்சத்துடன் கூடிய விருதும், தெருவோர வணிகர்கள் உள்ளிட்ட சிறு வணிகர்களுக்கு ரூபாய் 50 ஆயிரத்துடன் கூடிய விருதும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் (ஆகஸ்டு) அடுத்த மாத இறுதிக்குள் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
அந்த விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையிலான நியமன உள்ளடங்கிய குழுவினர் பரிசீலனை செய்து கூட்டாய்வுக் குழு சம்பந்தப்பட்ட உணவகத்தினை கள ஆய்வு செய்து தமது பரிந்துரையை உணவு பாதுகாப்புத்துறை ஆணையரிடம் சமர்ப்பிக்கும். பின்னர் மாநில அளவிலான பரிசீலனை குழுவிரால் பரிசீலித்து மாவட்டத்திற்கு தலா ஒரு பெரிய உணவகமும், சிறு உணவகமும் சிறந்த உணவகங்களாக தேர்தெடுக்கப்படும். பொதுமக்கள் உணவு பொருள்களின் தரம் சார்ந்த புகார்களை தெரிவிக்க TNFSD என்ற செயலி மற்றும் unavupukar.fsda@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் பெறப்படும். புகார்களுக்கு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.