நாகர்கோவில், ஜூலை 29 –
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த நிலையில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே புது குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுனிதா (35). தையல் தொழிலாளி. நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர், திடீரென்று தனது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்று கூறி கலெக்டர் அலுவலக வாசலில் நின்று உடலில் பெட்ரோல் ஊற்றினார். தற்கொலை செய்ய முயன்ற அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டனர். அவரை போலீசார் எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணைக்கு பின்னர் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இது தொடர்பாக சுனிதா வைத்திருந்த மனுவில், எனது மகள் தேர்வில் மதிப்பெண் குறைந்ததாலும், வீட்டில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்ததாலும் அவளை அடித்தேன். அவள் என்னுடன் இருக்க மாட்டேன் என்று கூறி மாத்திரை சாப்பிட்டதால் அவளை என் மூத்த தங்கை வீட்டில் கொண்டு விட்டேன். அங்கு எனது இளைய தங்கை இருப்பதாக அறிந்து மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதி அவரை திரும்ப அழைத்து வர சென்றேன். அப்போது எனது சித்தி ஜெயா என்பவரை அழைத்து தகவலை தெரிவித்தேன். ஆனால் எனது தங்கை எனது மகளை விடுவிக்க மறுத்து கதவை பூட்டி வைத்திருந்தார். இதனால் எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக அவர் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சுசீந்திரம் போலீஸ் அதிகாரி வந்து எனது மகளை விட முடியாது என்று கூறி என்னுடன் அனுப்பவில்லை. நான் கேட்டதற்கு என்னை அவர் கன்னத்தில் அறைந்து, கீழே தள்ளி விட்டதில் மயக்கம் அடைந்த என்னை 108 ஆம்புலன்ஸில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 9 நாட்கள் சிகிச்சையில் இருந்தேன். கடந்த 27-ம் தேதி சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். எனது இடது கண் தூரப்பார்வை இழந்துள்ளது. இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
எனவே இது தொடர்பாக தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகத்தில் தையல் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.