திருவள்ளூர், ஜூலை 9 –
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொல்லப்பட்டார். இவருடைய முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கடந்த ஐந்தாம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் நடைபெற்றது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆன்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் ‘தமிழ்நாடு பகுஜன் சமாஜ்’ என்ற பெயரில் புதிய கட்சியை அன்று அறிவித்து நீல நிறத்தில் யானை படம் கொண்ட கட்சி கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில் த.வெ.க. கட்சி கொடியில் யானை சின்னம் இடம்பெற்றுள்ளதை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை முதலாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது த.வெ.க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் யானை படம் பொறிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினர்.
அதற்கு பதில் அளித்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆனந்தன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தன்னுடைய புதிய கட்சியில் ‘பகுஜன் சமாஜ்’ என்ற பெயரை பயன்படுத்தியது தொடர்பாகவும் கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தியது தொடர்பாகவும் வழக்கு தொடர உள்ளதாக குறிப்பிட்டார். இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் வரும் வெள்ளிக்கிழமை தள்ளி வைக்கப்பட்டது.