திண்டுக்கல், ஜூன் 30 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் வருவாய் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சவர்ணம் தலைமை வகித்தார். வட்டாட்சியர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் சங்க டிச 3-இயக்கத்தின் மாநில துணைத் தலைவர் மோகன்ராஜ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் கண், கை, கால் என பல்வேறு மாற்று திறன்களை ஆய்வு செய்ய மருத்துவ குழுவினர் மற்றும் தன்னார்வ குழுவினர் கலந்து கொண்டு அளவீடு செய்தனர். முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் மருத்துவ குழுவினரின் பரிந்துரைப்படி உடனடியாக அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை வழங்கினார்.
இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பல்வேறு மாற்றுத்திறன் படைத்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து பயனடைந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பணியாளர்கள் ஈடுபட்டனர். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பால், ரொட்டி போன்ற ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டன.