நாகர்கோவில், ஏப். 02 –
நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள உணவகத்தின் முன்பு கழிவுநீர் தொட்டியிலிருந்து கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசி சுகாதாரமற்று காணப்படுகிறது; கழிவுநீர் தொட்டியின் மூடிகள் உடைந்தும் திறந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் நோய் தொற்று பரவுவதுடன், விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.
மாநகராட்சி என்பது சுத்தம், சுகாதாரம் போன்றவற்றை பேணி காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பு ஆகும். சுகாதாரம், தூய்மைப் பணிகள், குடிநீர் விநியோகம், சாலைகள் பராமரிப்பு, தெருவிளக்குகள், திடக்கழிவு மேலாண்மை மற்றும் பிறப்பு/இறப்புப் பதிவு போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கவும், பூங்காக்கள் பராமரிப்பு, வடிகால் அமைத்தல், பொது சுகாதாரம் மற்றும் கட்டிடங்களுக்கான அனுமதி வழங்குதல், வரி வசூல் செய்தல், மற்றும் நகரத் திட்டமிடல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளவும், குப்பைகளை அகற்றுதல், தெருக்களைச் சுத்தம் செய்தல் மற்றும் கழிவுநீர் கால்வாய்களைப் பராமரித்தல், தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொண்டு நகர மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் சுகாதாரத்தை மாநகராட்சி உறுதி செய்வதே மாநகராட்சியின் கடமையாகும்.
மாநகராட்சி ஆணையர் என்பவர் மாநகராட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாகச் செயல்பட்டு, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மேற்பார்வையிடுதல், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் மாநகராட்சி முடிவுகளை நடைமுறைப்படுத்துதல் ஆகிய முக்கியப் பொறுப்புகளைக் கொண்டவராகவும், மாநகராட்சியின் தினசரி நிர்வாகத்தைப் பார்த்தல் மற்றும் அனைத்துத் துறைத் தலைவர்களையும் ஒருங்கிணைத்தல், சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரம் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துபவராகவும் இருப்பது அவசியம்.
ஆனால் நாகர்கோவில் மாநகராட்சியில் நடப்பதை பார்க்கும்போது மக்களுக்கான ஒரு நிர்வாகமாக இது செயல்படாமல் பொதுமக்கள் பிரச்சனை மற்றும் சுகாதாரம் சம்பந்தமான விஷயங்களில் பெரும் அலட்சியம் காட்டி வருவதை காண முடிகிறது.
உதாரணமாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளிலும் நடைபெற்ற சுகாதாரப் பணிகளின் அவல நிலையை மாநகராட்சி புதிய கட்டிட வளாகத்தை இவர்கள் எவ்வாறு சுகாதாரத்துடன் வைத்திருக்கிறார்கள் என்பதை பார்த்தவுடன் கூறிவிடலாம்.
பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் தனது அலுவலக வளாகத்தில் உள்ள கழிவுநீர் ஓடைகளை பராமரிக்காமலும், கண்டுகொள்ளாமலும் விட்டதின் விளைவு தற்போது நோய் தொற்று பரவும் அவல நிலையில் காணப்படுகிறது.
இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் பணியின் தரத்தை ஆய்வு செய்யாமல் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே கேட்டு தெரிந்து கொள்வதாகவும், முறையாக ஆய்வு செய்ய தவறியதாகவும், வீட்டிலிருந்து ஏசி காரில் வந்து அலுவலகத்தில் ஏசியில் அமர்ந்து நேரத்தைப் போக்கி வருவதால் பொது மக்களின் சுகாதாரத்தில் இவருக்கு அக்கறை இல்லை எனவும் இவர் மீது அந்த அலுவலகத்தில் பணி செய்யும் பணியாளர்களே குற்றம்சாட்டி வருகின்றனர்.
பொது சுகாதாரத்தை தனது இருப்பிடத்திலிருந்து தொடங்க வேண்டிய ஆணையர் தனது இருப்பிடமான அலுவலக வளாகத்தை சுத்தம் செய்யாமலும், கண்டுகொள்ளாமலும் வைத்திருப்பதை பார்க்கும்போது இவர் நாகர்கோவில் மாநகராட்சி சுகாதாரத்தைப் பாதுகாப்பதில் துளியும் அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாக தெரிவதாக பல்வேறு தேவைகளுக்காக இந்த அலுவலகம் வரும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



