நாகர்கோவில், நவ. 7 –
நாகர்கோவில் அருகே கீழ மறவன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வ சரண் (25) டிரைவர். இவரது மனைவி ரேஷ்மா (20). 2 பேரும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு ரேஷ்மா தனது தாயாருக்கு வாட்ஸப் மூலம் அனுப்பிய மெசேஜ்ஜில், தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவே தான் சாகப் பார்க்கவும், என்னை மன்னித்து விடுங்கள் என குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த தாயார் அந்த பகுதியில் உள்ள உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவித்து ரேஷ்மாவை சென்று பார்த்தபோது அவர் வீடு கதவு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது ரேஷ்மா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது ரேஷ்மா ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகர்கோவில் ஆர்டிஓ களீஸ்வரியும் விசாரணை நடத்தி வருகிறார். ரேஷ்மாவின் சொந்த ஊர் ராஜபாளையம் ஆகும். அவரது பெற்றோர் அங்கு வசித்து வருகிறார்கள்.


