நாகர்கோவில், ஜூன் 8 –
நாகர்கோவில் அருகே உள்ள வடக்கு கோணம் சிஎம்சி நகர் பகுதி சேர்ந்தவர் ஸ்டாலின். தொழிலாளியான இவரது மனைவி டார்கஸ் ஷீலா (31). இவர் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு திருமணம் ஆகி 11 வருடங்கள் ஆகின்றன. 7 மற்றும் 5 வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் 6ம் தேதி காலை 5:30 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்று டார்கஸ் ஷீலா பின்னர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதையடுத்து அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எந்த தகவலும் இல்லை. செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதை அடுத்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் ஸ்டாலின் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ஷீலாவின் அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது டயரி ஒன்றில் அவர் 3 பக்க கடிதம் எழுதி வைத்திருந்தார். அதை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில், நான் பண்ணின தப்புக்கு யாரும் உடந்தை இல்லை. என்னுடைய தப்புக்கு நான் மட்டும் தான் காரணம். வேற யாரும் காரணம் இல்லை. என் புருஷனுக்கோ, கட்சிக்கோ, குடும்பத்துக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. என்னோட முழு மனதுடன் அறிவோடு நான் இதை எழுதுகிறேன். தைரியம் இல்லாத கோழையாக ஊரை விட்டு மட்டுமல்ல, உலகத்தை விட்டு போகணும். ஆனால் அதை இந்த ஊரில் நடத்தி என் புருஷனை கஷ்டப்படுத்த விரும்பவில்லை என எழுதியுள்ளார்.
மற்றொரு பக்கத்தில் எழுதி உள்ள கடிதத்தில் அன்புள்ள கணவருக்கு, உங்கள் அன்புக்கு நான் தகுதியானவள் இல்லை. என்னை மன்னித்து விடுங்கள். என்னால் உங்களுக்கு அசிங்கம் தான். தெரியாம தப்பு பண்ணிட்டேன். செத்துப் போக தைரியம் இல்லை. ஆனால் இனிமேல் உங்க கண் முன்னே இருந்து உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. எங்காவது போய் நான் செத்துப் போகிறேன். மன்னிச்சிடுங்க. என் புள்ளைங்க கிட்ட மன்னிப்பு சொல்லிருங்க. என்னால் எல்லோருக்கும் கேவலம் என எழுதி உள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்: டார்கஸ் ஷீலாவுக்கு கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. சுய உதவி குழுக்களில் கடன் பெற்றுள்ளார். இந்த கடனை திரும்ப அடைக்க நகைகளை விற்றதாகவும், இதனால் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் டார்கஸ் ஷீலா வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. நேற்று காலையில் போன் ஆன் ஆகியது. கோவையில் இருக்கும் தனது சகோதரர் ஒருவரிடம் பேசியுள்ளார். எனவே டார்கஸ் ஷீலா வெளியூருக்கு சென்றிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.



