களியக்காவிளை, செப். 22 –
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க சென்ற சுவாமி விக்கிரகங்களுக்கு குமரி எல்லையில் பக்தர்கள் கொடுத்த சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் பத்மனாபபுரம் அரன்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மன்னர் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றிய பின் நவரத்திரி விழாவும் மாற்றப்பட்டது. நவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் வகையில் சுவாமி விக்கிரகங்கள் ஆண்டுதோறும் திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.
இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், பத்மனாபபுரம் அரன்மனை தேவாருக் கட்டு சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாக நேற்று முன்தினம் திரும்பி குழித்துறை மகாதேவர் கோயிலில் தங்கியது. நேற்று காலை அங்கிருந்து திரும்பி திருத்துவபுரம், படந்தாலுமூடு வழியாக களியக்காவிளை வருகை தந்த சுவாமி விக்கிரகங்களுக்கு முளவரக்கோணம் இளம்பால கண்டன் ஸ்ரீர் தர்ம சாஸ்த்தா சார்பில் தட்டு பூஜைகள் நிவேத்தியமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து குமரி மாவட்ட எல்லையில் கேரளா அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கேரளா மாநில வnத்திய குழுவினர் , போலீசார் அணிவகுக்க தட்டு பூஜை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கேரளா மாநில கவர்னர் அருள் லேக்கர், கேரளா தேவசம் போர்டு தலைவர் பிரசாத் பாறசாலை எம்.எல்.ஏ ஹரீந்திரன், தமிழக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரர்.சி. சுப்பிரமணியன், குமரி மாவட்ட அறங்காவலர் குழு இணை ஆணையாளர் ஜான்சி ராணி, ஏ.டி.எஸ்.வி மதியழகள், மாரத்தாண்டம் டி. எஸ்.பி.நல்லசிவம், விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
அனைவரின் வரவேற்பு ஏற்றுக் கொண்ட சுவாமி விக்கிரகங்கள் முறைப்படி கேரளா மாநில அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரளா மாநிலத்திற்கு ஊர்வலமாக சென்ற சுவாமி விக்கிரகங்கள் பாறசாலை உதியன்குளம் கரை வழியாக செய்யாற்றின்கரை கிருஷ்ண சுவாமி கோயிலில் தங்குகிறது. இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு நவராத்திரி கொலு மண்டபத்தில் நவராத்திரி பூஜைக்காக வைக்கப்படுகிறது. நவராத்திரி பூஜை முடிந்து சுவாமி விக்கிரதங்கள் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது.



