ஆரல்வாய்மொழி, செப். 06 –
தோவாளை மலர் சந்தையில் பூ வியாபாரிகள் 500 கிலோ பூவில் பூ கோலமிட்டு மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஓணம் பண்டிகையினை முன்னிட்டு கடந்த 3-ம் தேதி அதிகாலையில் இருந்து நான்காம் தேதி முழுவதும் தொடர்ச்சியாக பூ சந்தை இயங்கியது. இந்த மலர் சந்தைக்கு கேரளா வியாபாரிகள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளின் வருகையினை கருத்தில் கொண்டு வெளி ஊர்களில் இருந்து ஏராளமான பூக்கள் தொடர்ந்து வர வைக்கப்பட்டு பூ விற்பனையானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் தோவாளை பூ வியாபாரிகள் ஓணம் பண்டிகையினை கொண்டாடும் விதத்தில் வருடம் தோறும் பூ வியாபாரிகள் பல நூறு கிலோவில் பூக்கோலமிடுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக பூ கோலமிட்டு மகிழ்ந்த வியாபாரிகள் மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் தோவாளை, கிருஷ்ணன்புதூர் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் முன்பு உள்ள வளாகத்தில் ஓணம் கேரள மன்னர் மாவேலி சக்கரவர்த்தி உருவத்தை பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
சுமார் 500 கிலோ மலர்களை கொண்டு 100 பூ வியாபாரிகள் இணைந்து இந்த அத்தப்பூ மாவேலி சக்கரவர்த்தி பூக்கோலம் இட்டு உள்ளனர். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இது போன்று பிரமாண்டமான பூ கோலம் இடுவதால் இதனைக்கான ஏராளமான பொதுமக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தோவாளை மலர் சந்தைக்கு வந்து மலர் ஓவியத்தை பார்த்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.



