நாகர்கோவில், ஜூலை 22 –
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட புத்தொழில் நிறுவனர்கள், மாணவர் தொழில்முனைவோர், தொழில் வளர் மையங்கள், கல்வி நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் காஃபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு, தொழில்முனைவோர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர் அவர் கூறுகையில்: கன்னியாகுமரி மாவட்டம் கல்வி மற்றும் திறமைகளில் சிறந்து விளங்கும் மாவட்டம். இங்குள்ள இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு வேலை வழங்கும் ‘தொழில்முனைவோராக’ உருவாக வேண்டும். மாவட்ட நிர்வாகம் உங்களுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான ஆதரவை முழுமையாக தொழில்முனைவோர்களுக்கு வழங்கும்.
புதிய தொழில்களைத் தொடங்குவதிலும், அவற்றை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதிலும் உள்ள நடைமுறைச் சவால்கள் குறித்து பேசப்பட்டு, அதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விரைவான உதவிகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் இராமச்சந்திரன், மாவட்ட திறன் மேம்பாட்டு அலுவலக கூடுதல் இயக்குநர் லட்சுமிகாந்தன் மற்றும் முன்னணி வங்கி மேலாளர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



