சங்கரன்கோவில். மே.12
தேவகுளம் தேவர்குளம் காவல் நிலையத்தில் நடந்து வரும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென நெல்லை எஸ் பி சிலம்பரசனிடம் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் காவல்துறை மிகவும் கண்ணியமான முறையில் பொதுமக்களிடம் உறவு வைத்துள்ளது, இந்த சிறப்பான நடவடிக்கைகளின் மூலமாக மக்களிடையே காவல்துறைக்கு மிகவும் சிறந்த பெயர் உள்ளது என்பதும் அனைவரும் அறிந்தது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று அகில இந்திய அளவில் தமிழ்நாடு காவல்துறை மிகவும் உயர்ந்த பெயரை தாங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த சில மாதமாக தேவர்குளம் காவல் நிலையத்தில் சில காவல்துறை அதிகாரிகளால் அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.குறிப்பாக காவல் நிலையத்திற்கு வருகின்ற அரசியல்வாதிகள், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை குறைவாக நடத்தப்படுகிறார்கள் என தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. மேலும் சிலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த சூழ்நிலையில் கடந்த மே 8 ஆம் தேதி அன்று வன்னிக்கோனந்தலில் சில அமைப்புகள் சார்பாக தேவர்குளம் காவல் நிலைய அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த சாலை மறியல் போராட்டத்தை அமைதியான சூழ்நிலையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவுக்கு கொண்டு வராமல், வன்மத்தோடு பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் வள்ளிநாயகம் அவர்கள் உள்ளிட்ட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மே 9 ஆம் தேதி இந்த சம்பவத்தை கண்டித்து மானூர், தேவர்குளம், வன்னிக்கோனந்தல், பணவடலிசத்திரம், குருக்கள் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முழுக்கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. எனவே சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் ஒன்றிய பகுதிகளில் இந்த தொடர் தேவர்குளம் காவல் நிலைய பிரச்சினைகளால் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் பொதுமக்கள் மத்தியில் தேவர்குளம் காவல் நிலையத்தை பற்றி தவறான எண்ணங்கள் பதிவாகி வருகிறது.எனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை, விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்ந்து இப்பகுதி வியாபாரிகளுக்கும்,பொது மக்களுக்கும், காவல்துறை மேல் முழு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு, தேவர்குளம் காவல் நிலைய அதிகாரிகள் மேல் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்காலிகமாக முதலில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பணி இட மாற்றம் செய்து, மக்களிடம் நல்ல அணுகுமுறை கொண்ட சிறப்பாக பணி செய்யும் காவல் அதிகாரிகளை பணி அமர்த்தி இப்பகுதியில் அமைதியான நிலை உருவாக்கி, தொடர்ந்து சுமூக நிலை ஏற்படுத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது மதிமுக துணை பொதுச்செயலாளர் தி மு ராஜேந்திரன் மதிமுக சுதா பரமசிவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இசக்கித்துரை, அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் கருப்பசாமி பாண்டியன் பார்வர்ட் பிளாக் கட்சி சுப்பிரமணியன், ஆதித்தமிழர் பேரவை தென்னரசு, ஆதித்தமிழர் கட்சி ஆதவன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சி லிங்கவளவன், புலித்தேவன் மக்கள் கழகம் பெருமாள்சாமி , திமுக மாவட்ட பொருளாளர் சரவணன்,ஒன்றிய செயலாளர்கள் திமுக பெரியதுரை ,பால்ராஜ், அன்பழகன், மதிமுக வேல்சாமி,சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், வீமராஜ், பசுபதி பாண்டியன் ,ஜெயக்குமார், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்