தென்காசி, ஜூலை 10 –
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, ஸ்ரீ பராசக்தி வித்யாலயா (CBSE) பள்ளி மற்றும் ஆழ்வார் குறிச்சி சிவன் கோவில் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது:
இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் 25 பள்ளிகளும், 10 கல்லூரிகளும், 01 ஐடிஐ பிரிவும் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நடைபெறுகின்ற பள்ளி, கல்லூரிகளில் ஆய்வு செய்வதை உறுதி செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் திருச்செந்தூர் சுப்புரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, ஸ்ரீ பராசக்தி வித்யாலயா (CBSE) பள்ளி, கீழப்பாவூர், ஆழ்வார் குறிச்சி சிவன் கோவில் ஆகிய இடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 2800க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். ஸ்ரீ பராசக்தி வித்யாலயா (CBSE) பள்ளியில் 531 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இப்பள்ளியில் 46 ஆசிரியர்களும், 7 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் உள்ளனர். குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோவில் நிதி ரூ.900 இலட்சத்தில் புதிதாக 28 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 2 மற்றும் 3-ம் தளங்களில் 28 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் ரூ.748 இலட்சம் என மொத்தம் ரூ.1648 இலட்சம் செலவில் கட்டிடப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பள்ளி விடுதியில் 50 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.
திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோவிலை ரூ.270 இலட்சம் மதிப்பீட்டில் பழுது பார்த்து புதுப்பிக்கும் பணியும், ரூ.978 இலட்சம் மதிப்பீட்டில் பணியாளர் குடியிருப்பு கட்டும் பணியும், ரூ.13.82 இலட்சம் செலவில் திருக்கோவில் நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரையினை மாற்றி அமைக்கும் பணியும், ரூ.14.90 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தொட்டி அமைக்கும் பணியும், ரூ.39 இலட்சம் மதிப்பீட்டில் வண்ண கற்கள் பதிக்கும் பணியும், ரூ.72 இலட்சம் மதிப்பீட்டில் உதவி ஆணையர் / செயல் அலுவலர் குடியிருப்பு கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம்.
இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.