தூத்துக்குடி, ஜூலை 15 –
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் திங்கள்கிழமை மக்கள் குறை களையும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 580 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 37 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.4720 மதிப்பில் 10 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டிகளையும், தலா ரூ.5479 மதிப்பில் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.74,595 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வழங்கினார். முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை தலைமைச்செயலகத்தில் 11.07.2025 அன்று தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு 23 வாகனங்கள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு வாகனங்களை வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி இரா. ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இரவிச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி. புவனேஷ்ராம், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் தமிழரசி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அனைத்துத்துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.