தருமபுரி, ஆகஸ்ட் 6 –
தருமபுரி மாவட்ட மருத்துவ மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணி நகர பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி நெசவாளர் காலனி வரை சென்று முடிவடைந்தது. இதில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் தொழுநோய்க்கான விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட முழுவதும் வீதி வீதியாக தொழுநோய் கண்டுபிடிப்பு பணியினை ஆட்சியர் துவக்கி வைத்தார். பின்னர் அவர் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது ஆட்சியர் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் தேசியத் தொழுநோய் திட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசுகளால் தொழுநோய் தாக்க விகிதம், குழந்தை தொழு நோயாளிகள், ஊனமுற்ற தொழு நோயாளிகள் மற்றும் குறைந்த நோய் பரவல் உள்ள பகுதிகளில் ஆகிய அளவுகோல்களின் அடிப்படையில் முதற்கட்டமாக தொழு நோயாளிகளை கண்டுபிடிப்பு பணிக்காக தீர்த்தமலை, அனுமந்தபுரம் வட்டாரங்கள் மற்றும் தருமபுரி நகரப்புற பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு கணக்கு எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கண்ட வட்டாரங்களில் உரிய பயிற்சி வழங்கப்பட்ட 225 தள்ளாளர்களைக் கொண்ட குழுக்கள் மூலம் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டுபிடிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளார்கள். மேலும் பள்ளி, கல்லூரிகளில் உணவகங்கள், தொழிற்சாலைகள் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, மாவட்ட சுகாதார அலுவலர் பூபேஷ், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார், நகராட்சி தலைவர் லட்சுமி, தொழுநோய் துணை இயக்குனர் புவனேஸ்வரி, நகராட்சி ஆணையாளர் சேகர், நகர் நல அலுவலர் லட்சிய வர்ணா மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.