தருமபுரி, ஆகஸ்ட் 5 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சர்க்கரை ஆலைக்கு காமராஜர் பெயர் சூட்ட வேண்டும் என தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா மத்திய நலத்திட்ட பிரிவு துணைத் தலைவர் பி. கே. சிவா, முருகன் விவசாய அணி, ராஜா ராம் நகர செயலாளர் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பாரத பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். சர்க்கரை ஆலையில்
இயக்கி வரும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு தியாகி சுப்பிரமணிய சிவா பெயரை சூட்ட வேண்டும்.
ஆலையின் செயல்பாடு மெத்தனமாக உள்ளது. கடந்த காலங்களில் 3 லட்சம் முதல் 4 லட்சம் டன் வரை கரும்பு அரைத்து நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. ஆனால் கடந்த சில காலமாக அரவைக்கு தேவையான கரும்பு பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. தேவையான தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தாமலும், சரியான தொழில்நுட்ப அலுவலர்களை நியமிக்கப்படவில்லை. ஆலையில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம் திறப்பு விழா செய்ய வேண்டும். ஆலையில் நீண்ட நாட்களாக குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆலைய வளாகத்தில் உள்ள குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.