சுசீந்திரம், நவ. 1 –
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் காலை 9 மணியளவில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியினை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி துவக்கி வைத்தார். இது குறித்து இணை ஆணையரிடம் கேட்டபோது கடந்த 2025 – 2026 சட்டமன்ற கூட்டத்தொடரில் பழமை வாய்ந்த 10 திருக்கோவில்களில் கோவில்களின் வரலாறு கோவில்கள் இருப்பிடம் பூஜை நேரங்கள் குறித்து அறிந்து கொள்ளும் விதத்தில் தொடுதிரையுடன் கூடிய தகவல் பெட்டியினை அமைக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.
அதன்படி இன்று காலை 8.30 மணி அளவில் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவிலில் மக்கள் பயன்படும் வகையில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டை துவக்கி வைத்தார்.
அதன் பின்பு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில், சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், பேரூர் அருள்மிகு பட்டாசுவர் திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், புன்னைநகர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஆகிய பத்து கோவில்களில் பொதுமக்கள் பயன்படும் வகையில் தொடுதிரை வசதியுடன் கூடிய தகவல் பெட்டியின் செயல்பாட்டை இயக்கி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தந்த கோவில்களின் வரலாறு சிறப்பு புரதானம் மற்றும் அருகில் உள்ள திருக்கோவில்கள் அவற்றின் முக்கியத்துவம் சுற்றுலா தலங்கள் மற்றும் பக்தர்களுக்கான கோவில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் தொடர்பான விபரங்களை பக்தர்கள் தாங்களாகவே அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியும் வரவேற்பும் வளங்கி வருகின்றனர் என்றார். அவருடன் நிகழ்ச்சியில் சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, சுசீந்திரம் பேரூர் செயலாளர் பாபு, இணை ஆணையர் நேர்முக உதவியாளர் வெங்கடேஷ், மராமத்து பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் உட்பட கோவில் ஊழியர்கள், பக்தர்கள் பெருமளவு கலந்து கொண்டனர்.


