மதுரை, ஜூன் 30 –
மதுரை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை வேலை நிறுத்தத்தால் நியாய விலை கடைகளுக்கு அரிசி கொண்டு செல்லும் பணி முடங்கியது.
மதுரை, ஜெயந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வெங்கடாஜலபுரம் கிடங்கில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு இருந்து தான் மதுரை மண்டல மாநகர் புறநகர் பகுதிகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நுகர் பொருள்கள் கொண்டு செல்லப்படும். இங்கு தினமும் 60 க்கும் மேற்பட்ட லாரிகளில் பொருள் வந்து இறக்குவதும் ஏற்றிச் செல்வதும் வழக்கம்.
இந்நிலையில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுமை தூக்குவோர் பாதுகாப்பு நலச் சங்கம் தென் மாவட்ட அமைப்புச் செயலாளர் முனியாண்டி கூறியதாவது: சுமை தூக்கும் தொழிலாளிகளுக்கு சர்வீஸ் கார்டு வழங்கி நிரந்தரமாக பணி நியமனம் செய்ய வேண்டும். தொழிற்சங்க தேர்தல் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கிய போதும் நிர்வாகம் தேர்தல் நடத்த விடாமல் தாமதப்படுத்துகிறது. உடனே தேர்தல் நடத்த வேண்டும்.
540 சுமை தூக்கும் தொழிலாளிகள் தமிழ்நாடு முழுவதும் கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்தவர்களை பதிவேடுகளில் பதிவு செய்து நிரந்தரப்படுத்த வேண்டும்.
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த கூலி உயர்வு வழங்கப்படவில்லை. அதையும் உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தார் .
இதனால் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் கிடங்கில் இருந்து நியாய விலை கடைகளுக்கு அரிசி கொண்டு செல்லும் பணி முடங்கி உள்ளதால் நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசியை நம்பியே வாழும் ஏழை மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.