சேலம், ஜூலை 21 –
சேலம் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் சார்பாக ஏற்றுமதி குறித்து கருத்து கேட்புக்கூட்டம் சேலம் குரங்கு சாவடி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறை துணை இயக்குனர் மஞ்சுளா வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி மற்றும் டி.ஐ.சி பொதுமேலாளர் சிவக்குமார், சேகோசர்வ் பொதுமேலாளர் கீர்த்தி பிரியதர்ஷினி ஆகியோர் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் குறித்து வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண்மை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சி.இ.ஓ டாக்டர் கே. அழகு சுந்தரம் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்கள் துறை இயக்குனர் பி. குமரவேல் பாண்டியன் சிறப்புரை வழங்கினார். மேலும் மாம்பழம் கடந்த வருடம் அதிகமான விளைச்சல் இருந்தும் சரியான விலை கிடைக்காததால் வருகின்ற சீசனில் அதை முன்கூட்டியே எவ்வாறு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அதற்கான வழிமுறைகளை சரியான முறையில் கையாள வேண்டும் என்றும் விவரித்தனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட மா வகைகள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்காக மலேசியாவில் இருந்து ஏற்றுமதி குறித்து விவசாயிகளிடம் அறிவுரை வழங்க மார்க்கெட்டிங் நிபுணர் வரவழைக்கப்பட்டிருந்தார். மேலும் இயற்கை முறையில் உற்பத்தி செய்து அதை எவ்வாறு தொழில் முறைபடுத்த வேண்டும் என்று வேளாண்மை மேம்பாட்டு இயக்குனர் இ. சோமசுந்தரம் விளக்கினார். தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி இயற்கை முறையில் அறுவடை செய்யவும் எவ்வாறு மாவ வகைகளை மதிப்பு கூட்டி வியாபார முறையினை சந்தைப்படுத்துவது குறித்தான அறிவுரைகளை ஒருங்கிணைப்பாளர் ஜெய்சீ ஜோசப், துணைமேலாளர் முத்தையா, முதுமேலாளர் பாண்டித்துரை ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர்.
விழா நிறைவில் தோட்டக்கலைத்துறை முதுமேலாளர் தீபன் சக்ரவர்த்தி நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து
கொண்டனர்.