தஞ்சாவூர், ஜூலை 28 –
தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலருக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் மேக்ஸ்வெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாதவன் வழிகாட்டுதலின்படி மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) அய்யா கண்ணு கொடியேற்றி ரெட்கிராஸ் நிறுவனர் ஜீன் ஹென்றி டுனாண்ட் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அமர்நாத் அனைவரையும் வரவேற்றார். முகாமிற்கு மேக்ஸ்வெல் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுஜய் குமார் முன்னிலை வகித்தார்.
பூதலூர் வட்டார கல்வி அலுவலர் சங்கீதா, தஞ்சாவூர் ஊரக ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் இளவேனில் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளரும் தஞ்சாவூர் மாவட்ட அமைப்பாளருமான பிச்சைமணி பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் செயல்பாடுகள் பற்றி விளக்கிக் கூறினார். வல்லம் ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவ நிபுணர் எம்.ஆர். அபிராமி உடல் நலம், மனநலம், பல் மருத்துவ பாதுகாப்பு பற்றியும் யோகா செய்வதன் பயன் பற்றி விரிவாக விளக்கிப் பேசினார். இந்தியன் ரெட் கிராஸ் தஞ்சாவூர் மாவட்ட மூத்த நிர்வாக குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரெட்கிராஸ் வரலாறு, ஜூனியர் ரெட் கிராஸின் வரலாறு அடிப்படை கொள்கைகளை விளக்கி பேசினார்.
தஞ்சாவூர் மது போதை தடுப்பு சிறப்பு ஆலோசகர் கேத்ரினாள் மேரி பேசுகையில் மது போதை தடுப்பு விழிப்புணர்வு பற்றி பேசினார். 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் விமல் ராஜ் அவசர காலத்தில் செயல்பட வேண்டிய பணிகளை எடுத்து கூறினார். ரெட் கிராஸ் முதலுதவி பயிற்றுநர் சுரேஷ்குமார் முதலுதவி பற்றி செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார். நிறைவாக தஞ்சாவூர் நகர ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் திருமகள் நன்றி கூறினார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ஜேசுதாஸ் தமிழ் மாறன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.