தஞ்சாவூர், ஆகஸ்ட் 8 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில் ஆய்வு மாணவர் களுக்காக வாரம் தோறும் வியாழக் கிழமை வியாழ வட்டம் என்கின்ற சிறப்பு ஆய்வரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த வியாழன் வட்டத்தில் 100வது வார சிறப்பு ஆய்வரங்கம் நடைபெற்றது. சிறப்பு ஆய்வரங்கத்திற்கு தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் தமிழ் பண்டிதரும் வரலாற்று ஆய்வாளருமான மணி மாறன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்: மாமன்னன் ராஜேந்திர சோழன் வடக்கே ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம் உள்ளிட்டவை மட்டுமல்லாமல் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளையும் கடலில் மரக்கலம் செலுத்தி கைப்பற்றினான். அண்டை நாடுகள் எதிரி நாடுகளாக இருக்கக் கூடாது. அதனை எல்லாம் நட்பு நாடாக இருக்க வேண்டும் என அவர் கருதினார். ராஜேந்திர சோழன் முதலில் தஞ்சாவூர் தலைநகராக கொண்டு ஆட்சி செய்தார். ஆனால் தஞ்சாவூர் பகுதியில் ஐந்து ஆறுகள் ஓடுவதால் படையெடுப்பின்போது ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் தலைநகரை உருவாக்கினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோயில் திருப்பணியின் போது கண்டெடுக்கப்பட்ட 32 செப்பேடுகள் தான் ராஜேந்திர சோழனின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு முக்கியமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளே சான்று ஆவணங்களாக உள்ளன.
நாகப்பட்டினத்தில் ராஜராஜ சோழன் தொடங்கிய புத்த விகார கட்டுமானத்தை ராஜேந்திர சோழன் நிறைவு செய்து தென்கிழக்கு ஆசியாவின் ஸ்ரீ விஜய பேரரசின் உறவைப் பேணினார். சீனாவுடனும் நல்லுறவு கொண்டிருந்தார் என்றார் மணி மாறன்.
முன்னதாக பிரதமர் மங்கி பாத் என்னும் மனதின் குரல் நிகழ்ச்சியில் முனைவர் மணி மாறனின் ஓலைச்சுவடி வகுப்பைப் பாராட்டி பேசியதை அயல்நாட்டு தமிழ் கல்வி துறை தலைவர் குறிஞ்சி வேந்தன் தனது நோக்கவுரையில் குறிப்பிட்டு பேசினார்.