தஞ்சாவூர், ஆக. 3 –
தஞ்சாவூர் அருகே ஆம்பலாபட்டு வடக்கு இலுப்பை தோப்பு அரசு தொடக்கப்பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவ மாணவிகளின் எண்ணிக்கை, வருகை குறித்தும், தினசரி பள்ளி வருகைகளை உறுதிப்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மொட்டு, அரும்பு படி நிலைக்கேற்ப மாணவ மாணவிகளின் வாசிப்பு திறன் குறித்தும், அடிப்படை கணக்குகள் மேற்கொள்வது குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து பார்வையிட்டு தேவைக்கேற்ப அவற்றை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து வகுப்பறை முழுவதும் மாணவ மாணவிகளுக்கு எளிதில் புரியும் வகையிலான ஓவியங்கள் மற்றும் எழுத்து வடிவங்களை அதிக அளவில் ஏற்படுத்திட ஆசிரியருக்கு அறிவுறுத்தினார்.
மாணவ மாணவிகள் எழுத்துகளையும் உருவகங்களையும் பார்ப்பதன் மூலம் அவர்கள் நினைவில் நிற்பதுடன் அவற்றை எழுத்துக்கூட்டி படித்திட முயற்சி செய்யவும், உருவங்களின் பெயர்களை தெரிந்து கொள்வதுடன் அவற்றின் பெயர்களை எழுதி பழகிட வாய்ப்பாக அமையும் என தெரிவித்தார்.
மேலும் மாணவ மாணவிகளுக் கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். ஆசிரியர் அனைவரும் மாணவ மாணவிகள் கல்வி முன்னேற்றத் திற்கு ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். இதில் ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.